Credits -  உமா ஷக்தி - For www.dinamani.com - 27 August 2015

காமிக்ஸ் படிக்காமல் ஒரு பால்யத்தை கடந்து வந்தவர்கள் பால்யத்தின் சின்ன சின்ன சந்தோஷத்தை இழந்தவர்கள் தான். ஏனெனில் காமிக்ஸ் என்பதே இளம் மனங்களுக்குள் ஊடுறுவி அதிலுள்ள கற்பனைகள் கனவுகளுக்குத் தீனி போடும் ஒரு மாயக் கம்பளம். அந்த காமிக்ஸ் தான் கார்டூன்களாக உருமாறி தற்காலக் குழந்தைகளை தொலைக்காட்சி முன் தவமிருக்கச் செய்கிறது. காமிக்ஸ் விரும்பிகள் வளர்ந்த பின்னரும், கையில் ஒரு காமிக்ஸ் புத்தகம் கிடைத்துவிட்டால் போதும், நிச்சயம் படித்துவிடுவார்கள். இத்தகைய காமிக்ஸ் பெரியவர்களுக்கானதாக  இருந்தால்? அதுவும் டிஜிட்டலாக இருந்துவிட்டால்.,, அதுவும் நம் தமிழிலேயே படிக்கக் கிடைத்தால். இதெல்லாம் நடக்குமா என்று கேட்டால், இதோ நடத்திக் காட்டியிருக்கிறார் ஒருவர். ‘திரு திரு துறு துறு’ திரைப்படத்தின் இயக்குநர் ஜெ.எஸ். நந்தினி இந்த அழகான விஷயத்தை செய்து முடித்திருப்பவர். டிஜிட்டலாக வெளி வந்துள்ள முதல் தமிழ் காமிக்ஸ் ‘சிவப்புக் கல் மூக்குத்தி’யைப் படைத்தவர் என்ற பெருமைக்குரிய நந்தினியிடம் ஒரு நேர்காணல்.

டிஜிடல் கிராபிக் நாவல் உருவாக்கணும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

சின்ன வயசுலேர்ந்தே காமிக்ஸ் ரொம்ப பிடிக்கும்.  சித்திரக்கதை'ன்னு ஒண்ணு எங்கேயாவது கண்ணுல பட்டா உடனே படிச்சிடுவேன். பாட்டு, நடனம், கவிதை, கதை, ஓவியம், இப்படி கலை சார்ந்த விஷயங்கள்'ல ஆர்வம் நிறைய இருந்ததால தான் சினிமாவுக்கே வந்தேன். கதை நல்லா எழுதுவேன். ஆனா சுமாரா தான் வரைவேன். அதனால நானே ஒரு காமிக்ஸ் புத்தகத்தை படிக்கணும்''ங்கற நீண்ட நாள் ஆசை தள்ளிப் போயிட்டே இருந்துது. 2009 செப்டம்பர்'ல திரு திரு துறு துறு ரிலீஸ்'க்கு அப்புறம் குழந்தை பெத்துக்க (2011), அப்புறம் அந்த செல்லக்குட்டிய கவனிக்க ப்ரேக் எடுத்தேன். 2013'ல ஒரு திகில் டிடெக்டிவ் படம் இயக்க ஆரம்பிச்சேன். அந்தப் படம் சில பிரச்சனைகளால நின்னு போச்சு. தமிழ் சினிமாவுல வருஷத்துக்கு இருநூறுக்கும் மேல படங்கள் ரிலீசாகி, அதுல சுமார் பத்து படங்கள் மட்டும் ஜெயிச்சிட்டு இருந்த நேரம் அது. தோல்வி அடைஞ்ச படங்கள் எல்லாம் மோசமான படங்கள் இல்ல. எவ்வளவோ நல்ல படங்கள், ப்ரோமோஷன் செய்ய முடியாம, தியேட்டர் கிடைக்காம காணாம போனது தான் உண்மை. இந்த சூழ்நிலையில நானும் போய் ஒரு லோ பட்ஜெட் படம் கமிட் பண்றது எனக்கு சரியாகப் படல. வேற எதாவது புதுமையா செய்யணும்னு நினைச்சேன். 'சிவப்புக்கல் மூக்குத்தி'ங்கற ஒரு புது கதையை உருவாக்கி, அதை காமிக்ஸா வெளியிட்டு, அதையே படமா பண்றதுக்கான முயற்சிகளை எடுப்போம்னு தோணுச்சு. ஆரம்பிச்சேன்.

இதற்கான வரவேற்பு தமிழ் சூழலில் உள்ளதா?

உலகளவுல காமிக்ஸ் படைப்புகள் இப்போ ஒரு அஞ்சாறு வருஷமா ரொம்ப பிரபலமாகிட்டு வருது. ஹாலிவுட்ல தயாரிக்கப்படுற பத்து படங்கள்ல ஒன்பது படங்கள் காமிக்ஸ் கதைகள் தான். Superman, Spiderman, Batman, Avengers, Hulk, Iron Man, Captain America, Xmen மாதிரியான சூப்பர் ஹீரோ கதைகள் மட்டுமில்ல, Sin City, 300, Wanted, Men in Black, Surrogates, 30 Days of Night, Scott Pilgrim, Walking Dead, இப்படி ஹாரர், த்ரில்லர், ஆக்ஷன், சயின்ஸ் பிக்ஷன், ஏன் காதல் படங்கள் கூட காமிக்ஸ் வடிவத்துல இருக்கு. 

ஆனா இந்தியாவுல, குறிப்பா தமிழ் சினிமாவுல அப்படி இல்லன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதுவே என்னை இந்த முயற்சியை நோக்கி தள்ளுச்சு. அப்புறம், இப்போ மார்கெட்ல இருக்குற தமிழ் காமிக்ஸ்கள் எல்லாமே நம்மளோட ஒரிஜினல் படைப்புகளா இல்லாம, வெளிநாட்டு காமிக்ஸ்'களோட மொழிபெயர்புகள்'ன்னு தெரிஞ்சது. சுவாரசியமான, புதுசான, இந்த காலத்து இளைஞர்கள் விரும்புற மாதிரி கதைகள் கொண்டு வந்தா நல்ல வரவேற்ப்பு இருக்கும்னு நான் நினைச்சேன். உண்மைதானே? 

கதையைப் பற்றி சில வரிகள்..இந்த genre எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?

ஹாரர் / த்ரில்லர் என்னோட பேவரிட் ஜானர். விட்டா பத்து படம் அப்படி தான் எடுப்பேன் :) சிவப்புக்கல் மூக்குத்தி கதை - ஹீரோவும் ஹீரோயினும் எப்படி சந்திச்சு, காதலிச்சு, கல்யாணம் பண்ணிக்கிறாங்கன்னு casual-ஆ ஆரம்பிக்கும் கதை. அப்புறம் ஒரு ரியல் எஸ்டேட் வேலை விஷயமா ரெண்டு பெரும் ஹீரோவோட நண்பன்/பிசினஸ் பார்ட்னரோட ஒரு எஸ்டேட்டுக்குப் போவாங்க. அங்கே அந்தப் பொண்ணுக்கு ஒரு சிவப்புக்கல் மூக்குத்தி கிடைக்கும். அதை போட்டதும் அவ வேற யாரையோ போல வித்தியாசமா நடந்துக்க ஆரம்பிச்சிடுவா. அப்புறம் அமானுஷ்யமான சம்பவங்கள், திடீர் திடீர் கொலைகள், திருப்பங்கள், மர்மங்கள் எல்லாம் நடக்கும். இதெல்லாத்துக்கும் காரணம் யார்? அந்த மூக்குத்தியின் பின்னணி என்ன? அப்படீங்கிறதை கண்டுபிடிகிறான் ஹீரோ.

உங்கள் டீமைப் பற்றிச் சொல்லுங்கள்?

நாலு பேர் கொண்ட சின்ன டீம். 

நான் கதை, வசனம், overall design, storyboard, colour correction. 

என்னோட படம் மற்றும் விளம்பரப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெரால்ட் ராகேஷ், இதுல உதவி எழுத்தாளர். 

மகேஷ் மற்றும் சாய்நாத் இவங்க ஓவியர்கள். 

டிஜிட்டல் நாவல்கள் இனிவரும் காலங்களில் நிறைய வருமா?  உங்களின் அடுத்த கட்ட திட்டம் என்ன?

கண்டிப்பாக வரும். “டிஜிட்டலா? பேப்பர் புக்’கா வெளியிடலையா?”ன்னு நிறைய பேர் கேக்குறாங்க. ஒரு விஷயம் சொல்றேன். என்னோட ‘திரு திரு துறு துறு’ திரைப்படம் இந்தியாவுலையே முதன் முறையா டிஜிட்டலா படமாக்கப்பட்டு, டிஜிட்டலா ப்ராசஸ் செய்யப்பட்டு, டிஜிட்டலா மட்டுமே வெளியிடப்பட்ட படம். அந்த சமயத்துல ஒரு சில படங்கள்ல தான் ரெட் ஒன் டிஜிட்டல் காமெரா மூலமா படமாக்கப் பட்டு வெளிவந்திருந்தது. அப்பல்லாம், 35mm பிலிம் காமெராவை விட்டுக்கொடுக்க நிறைய பேர் தயங்கினாங்க. டிஜிட்டல் காமேராவுல படம்பிடிச்சா குவாலிட்டி நல்லாயிருக்காதுன்னு அதை ஏத்துக்க மறுத்தாங்க. ஆனா அடுத்த சில வருடங்கள்லயே கடகடன்னு டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்து, தரமான புதுப்புது காமெராக்கள் வந்ததுக்கப்புறம், இன்னிக்கு கிட்டத்தட்ட எல்லாருமே டிஜிட்டல் காமெராவுலதான் படம் எடுக்குறாங்க.

இன்னொரு விஷயம். இப்பல்லாம் எல்லார் கையிலயும் ஸ்மார்ட் போன்ஸ் வந்தாச்சு. எல்லார் வீட்டுலயும் கம்ப்யூட்டர், லேப்டாப் இருக்கு. கரண்ட் பில், போன் பில் கட்டுறதுலேர்ந்து, வங்கி பரிவர்த்தனைகள் வரைக்கும் ஆன்லைன்ல தான் பண்றோம். பலமணிநேரங்கள் பேஸ்புக், ட்விட்டர், யூடியூப்ல தான் செலவாகுது. புதுசா வர்ற நியூஸ் எல்லாத்தையும் அந்தந்த வெப்சைட்டுகள்ல தான் போய்ப் படிக்கிறோம். வரலாறு, மருத்துவம், இலக்கியம், டெக்னாலஜி, சினிமா, அரசியல், இப்படி எல்லா விஷயங்களுக்கான தகவல்களையும் ஆன்லைன்ல தான் தேடித் தேடித் படிக்கிறோம். ஏன் ஒரு அட்ரஸ் வேணும்னாக் கூட முதல்ல கூகிள்ல ஒரு தட்டுத் தட்டிப் பாக்குறோம்.

அதே போல புத்தகங்களும் எப்பவோ டிஜிடல் ஆகியாச்சு. உலகம் பூரா பல லட்சம் மக்கள் தங்களோட கம்ப்யூட்டர், மொபைல், டாப்லெட்'கள்ல ஈ-புக்ஸ் படிக்கிறாங்க. நான் பேப்பர் புத்தகங்கள் வேண்டாம்னு ஒதுக்க சொல்லல. அவைகளோட அழகும், கொடுக்கும் அனுபவனும் அற்புதமானதுங்கறதை மறுக்க முடியாது... பிலிம் ஸ்டாக்'கில் படம்பிடிக்கப்படும் படங்கள் போல!

ஆனா, தினமும் மாறிட்டு இருக்குற டெக்னாலஜிக்கு ஏத்த மாதிரி படைப்பாளிகளும் வளைஞ்சு கொடுத்தா அவங்களோட படைப்புகள் இன்னும் நிறைப் பேருக்கு போய் சேரும். அதனால தான் ‘சிவப்புக்கல் மூக்குத்தி’ காமிக்ஸை முதல்ல டிஜிட்டல்லா வெளியிட்டுருக்கேன். உங்க வீட்டுல ஒரு கம்ப்யூட்டர்-ரோ லேப்டாப்-போ இருந்தா போதும். www.mbcomicstudio.com போய், ‘சிவப்புக்கல் மூக்குத்தி’ ஈ-புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கலாம். ட்ரை பண்ணிப் பாருங்களேன்.

அடுத்தது, ‘சிவப்புக்கல் மூக்குத்தி’ காமிக்ஸை படமாக்கும் முயற்சி. நடந்தா.... இந்தியாவுலயே காமிக்ஸ்லேர்ந்து எடுக்கப்பட்ட முதல் திரைப்படமா இது அமையும். மத்தப்படி, ஏதாவது ஒரு மீடியத்துல நான் என்னோட படைப்புகளை குடுத்துட்டே இருப்பேன்.

சிவப்புக்கல் மூக்குத்தி தமிழ் காமிக்ஸ் புத்தகம் PDF

Comment